×

பட்டினப்பாக்கத்தில் வணிக வளாகத்துடன் ரூ.2.5 கோடியில் நவீன பேருந்து நிலையம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை: பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்தில், மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ரூ.2.5 கோடி செலவில் வணிக வளாகங்களுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் மெட்ரோ ரயில் நிறுவனத்தால் கட்டப்பட உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். சென்னையில் மழைநீர் சூழ்ந்துள்ள மந்தைவெளி, தி.நகர் பணிமனை மற்றும் பேருந்து நிலையம், பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் ஆகியவற்றை போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கனமழை காரணமாக கடந்த மூன்று நாட்களாக மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 31 பணிமனைகள் சென்னையில் அமைந்துள்ளன. தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக, 16 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட உள்ளன.  இந்த 31 பணிமனைகளில் மந்தைவெளி மற்றும் தி.நகர் ஆகிய இரண்டு பணிமனைகளில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளது. இந்த இரண்டு பணிமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டேன். மந்தைவெளி பணிமனையில் தேங்கிய மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. தி.நகர் பேருந்து நிலையத்தில் மழைநீரினை மின்மோட்டார் மூலம் உடனடியாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கூடுதல் மின்மோட்டார்கள் கொண்டு மழைநீரினை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  

மந்தைவெளி பணிமனை மற்றும் பேருந்து நிலையம் ஒரு ஏக்கர் 44 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 33 சென்ட் நிலம் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வழங்கப்பட உள்ளது.  இதற்கு பதிலாக பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்தில், ரூ.2.5 மதிப்பீட்டில் வணிக வளாகங்களுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் மெட்ரோ ரயில் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட உள்ளது. இந்த மழை காலங்களிலும் தமிழ்நாடு முழுவதும் 17,576 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் திருநெல்வேலியில், கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான நிவாரண பணிகளுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி பேருந்துகள் சேவையானது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு,  தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, மாநகர் போக்குவரத்து கழக  மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் ஆகியோர் உடன்  இருந்தனர்.

Tags : Pattinapakkam ,Minister ,Rajakannappan , Pattinapakkam, shopping mall, modern bus stand, Minister Rajakannanpan
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...